எங்கள் பகுதிகளில் உள்ள இராணுவம் எங்கள் அன்றாட வாழ்க்கையிலும் வணிகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் எந்தத் துறையையும் விட்டுவிடவில்லை. அவர்கள் முடி திருத்தும் கடைகளைக் கூட நடத்துகிறார்கள். ஹோட்டல்கள், பெரிய உணவகங்கள் முதல் சிறிய கூல் ஸ்போட்ஸ் வரை. பெரிய அளவிலான வணிகங்கள் முதல் சுயமாக சாலையோர உணவுக் குடிசைகளை நடத்துபவர்கள் போன்ற தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர், இந்த ஹோட்டல்களை உள்ளாட்சி மன்றங்களோ அல்லது பொது சுகாதார ஆய்வாளர்களோ ஆய்வு செய்வதில்லை.
விவசாயிகள் கடன் பெற்று விவசாயம் செய்கின்றனர். தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். ஆனால் இராணுவத்திற்கு அத்தகைய செலவுகள் இல்லை. எனவே, அவர்கள் குறைந்த விலையில் தங்கள் தயாரிப்புகளை வழங்க முடியும். சாதாரண விவசாயிகளால் அந்த விலைக்கு விளைச்சலை விற்க முடியாது. ராணுவமும் சிமென்ட் செங்கற்களை உற்பத்தி செய்கிறது. மணல் கடத்துவதற்கு அனுமதி பெற வேண்டும் என்பது சட்டம். இராணுவத்திடம் அத்தகைய அனுமதிகள் இல்லை. இவற்றை முறைப்படுத்தாததால், சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. எங்கள் ஏரிகளில் ராணுவம் பலவந்தமாக மீன்பிடிக்கிறது. ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களை சாதாரண மக்கள் எப்படி எதிர்க்க முடியும்?
மக்களின் காணிகளை இராணுவம் பலவந்தமாக அபகரித்து பாரியளவில் விவசாயம் செய்தது. நிலத்தை மீட்க போராடி வரும் நிலையில், அரசு மற்றும் உளவுத்துறையின் கண்காணிப்புக்கு உள்ளாகி வருகிறோம். சில நில உரிமையாளர்கள் அகதிகள். மறுபுறம் யுத்தத்தின் போது பல காணி உறுதிகள் அழிக்கப்பட்டன. அவற்றை மீட்பதும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.
முல்லைத்தீவு மிகவும் இராணுவமயமானது. ராணுவம் மக்களை எப்போதும் கண்காணித்து வருகிறது. அதனால் மக்கள் பயத்தில் வாழுகிறார்கள் . ஒரு ஜனநாயக நாட்டில், ஒரு குழு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதும், நாட்டின் சட்டங்களையும் விதிமுறைகளையும் தன்னிச்சையாக மீறுவதும் நியாயமா?
கஜேந்திரன்
மாங்குளம்
