இராணுவம் வருகையின் போது 34 குடியிருப்புகள் இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் இராணுவம் தற்காலிகமாக நாங்கள் இங்கு வந்திருக்கிறோம் என்றே கூறினார்கள்.நாங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று கூறவில்லை. 08.11.2011 அன்று மக்கள் ஒரு ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த ஆர்ப்பாட்டம் செய்தவுடன் அந்த இடத்திலிருந்து ஒவ்வொருவர்களின் குடிசைக்கு அருகிலும் இரண்டு இராணுவவீரர்கள் அமர்த்தபட்டனர். அவ்வாறு இராணுவம் அமர்த்தப்பட்ட பிற்பாடு அங்கு சிறைக் கைதிகள் போல் நாங்கள் ஒன்பது குடும்பத்தினர் அங்கு இருந்தோம். மற்றவர்கள் எல்லோரும் அவ்விடத்தை விட்டு ஓடி விட்டார்கள். அதன் பிறகு கோர்ட் தீர்ப்பு மற்றும் மக்களின் ஆர்ப்பாட்டத்தின் பிற்பாடு,15.01.2019 அன்று 39 ஏக்கர் காணியை விடுவித்து இருந்தார்கள். பிரதேச செயலாளரின் தகவல்களின்படி 130 ஏக்கர் காணி வட்டாரத்துக்குள் காணப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் இராணுவத்தினர் எல்லா காணி நிலங்களையும் அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து 59 ஏக்கரை மட்டுப்படுத்தி 39 ஏக்கரை விடுவித்தனர்.
இருந்தும் அவற்றை மக்கள் பயன்படுத்த முடியாமல் வனவிலங்கு திணைக்களத்தினால் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இவ்விடத்தை விட்டு வெளியேறிய மக்கள் வந்து மீண்டும் இங்கு வந்துகுடியேறும் சந்தர்ப்பம் இல்லை. அவ்வாறான சந்தர்ப்பங்கள் வரும்போது வனவிலங்கு அதிகாரிகளினால் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்கின்றனர் . இப்பிரச்சினை தொடர்பாக பிரதேச செயலாளரிடம் அணுகிய போது அவர்கள் எங்களுக்கு ஒரு கடிதத்தை தந்துள்ளனர். கடிதத்தின் வனவிலங்கு அதிகாரிகள் காணி நிலத்தை கோரிய ஒரு கடிதம் ஆகும். கடிதம் எங்களுக்கு கிடைத்துள்ள போதும் எங்கள் காணியை விட்டுக் கொடுத்துவிட்டு நாங்கள் எங்கு செல்வது. வனவிலங்கு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் வழக்குகளை பதிவுசெய்தாலும் இந்த காணிக்குரிய உரிமம் கோரும் எந்த ஒரு ஆதாரமும் அவர்களிடம் இல்லை. நீதிமன்றத்தில் சென்ற வழக்குகள் இதன் காரணமாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு சாதகமாக அமையவில்லை.
தற்போது இராணுவத்தினர் ஒரு பகுதியிலும் நாங்கள் ஒரு பகுதியினரும் வசித்து வருகின்றோம்.இது தொடர்பாக நாங்கள் போராட்டங்களை மேற்கொள்ளும் போது எங்களை கைது செய்து சிறையில் தள்ளும் சூழ்நிலை அதிகமாக இங்கு காணப்படுகின்றது. நீதிக்கு எதிராக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம்.எட்டு வருடங்களுக்கு மேல் எங்களுடைய வாழ்வாதாரமும் நூற்றுக்கு நூறு வீதம் முற்றாக பாதிக்கப்பட்டது.நாங்கள் 5 பேர் கொண்ட குடும்பம் கஷ்டத்துடன் வாழ்கிறோம். எங்கள் கோரிக்கை எங்களுடைய மக்களுடைய காணிகள் மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஆகும்.
ஏ. ம். மிஸ்பாகு
ஆலிம் சென்னை, அம்பாறை
