காணி அபகரிப்பு என்ற விடயத்தில் கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட மக்கள் மிகவும் மோஷமாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். மூவாங்கனை முன்மாரியிலே குறிப்பாக இந்த கிங்குரானை சீனி தொழிற்சாலை கூட்டுத்தாபனமானது எங்களுடைய வாழ்வாதாரத்தையும் எங்களுடைய சொந்தக் காணியையும் சட்டவிரோதமாக அபகரித்து எங்களை அந்த காணியில் இருந்து பலாத்காரமாக துரத்தி அடித்தார்கள்.அதுமட்டுமல்லாமல் சீனி தொழிற்சாலை கூட்டுத்தாபனமானது அந்த சொந்த காணிக்கு உரிமையான மக்களை துரத்திவிட்டு வெளி மாகாணங்களில் இருந்து பெரும்பான்மை இனத்தவர்களை வரவழைத்து அந்நிலங்களில் குடியமர்த்தி கரும்புச் செய்கை தொழிலாளர்களாக ஈடுபடுத்தி வருகின்றார்கள்.
மூவாங்கனை முன்மாரியில் என்னுடைய சொந்த காணியான இரண்டரை ஏக்கரினை இந்த சீனி தொழிற்சாலை கூட்டுத்தாபனம் பலாத்காரமாக அபகரித்துள்ளது. அதேபோன்று நுரைச்சோலை, வருணந்து வட்ட போன்ற இடங்களில் மிக மோசமான முறையிலே இந்த சீனி தொழிற்சாலை கூட்டுத்தாபனமானது மக்களுடைய காணியை மிக அடாவடித்தனமான முறையில் அபகரித்துள்ளது .இவ்வாறு அபகரிக்கப்பட்ட இந்த காணியானது என்னுடைய பூர்விக காணியாக இருக்கின்றது. காணி உரிமை பத்திரம் என்னிடம் இருக்க என்னுடைய காணியிலேயே இன்று வேறு ஒருவர் தொழில் செய்கின்ற ஒரு துர்பாக்கிய நிலைமை இன்னும் இந்த அம்பாறை மாவட்ட வாழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இழந்த காணிகளை எப்படியாயேனும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஒரு முனைப்புடன் இம்மக்கள் ஹிங்குரான சீனித் தொழிற்சாலை கூட்டுத் தாபனத்திடம் இது தொடர்பாக பல தடவைகள் பேசிய பொழுதும் அவர்கள் மிக மோசமான முறையில் நடந்து கொண்டமையும் அதேபோன்று அவர்கள் வன்முறையான முறையிலே அவர்களுக்கு எதிராக அடிதடிகளில் ஈடுபட்டமையும் மேலும் அரசாங்கத்திடம் இது தொடர்பாக பல கோரிக்கைகளையும் பல போராட்டங்களையும் நடத்திய எவ்வித பயனும் அளிக்கவில்லை.
றிபா முஹம்மட் முஸ்தபா
சம்மாந்துறை
