என் கடைசி மூச்சு விடுவதற்குள் என் மகனை மீண்டும் பார்க்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் – பாலேந்திரன் ஜெயக்குமாரி

Balendran jeyakumary 3 ed

எனக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். எனது கணவரும் இரண்டு மூத்த மகன்களும் போரில் இறந்துவிட்டனர். 2009ல், என் இளைய மகன் O/Ls முடித்து வீட்டில் இருந்தான். வீட்டுச் செலவுகள் அதிகமாக இருந்ததால் இளைய மகன் வேலையைத் தேடி வீட்டை விட்டு வெளியேறினான். என் மகன் இன்று வரை வீட்டுக்கு வரவில்லை. தெருவெங்கும் நடந்து என் மகனைத் தேடினேன். சிலர் என் மகனைப் பார்த்ததாகச் சொன்னார்கள். அதன் பிறகு, எங்கள் மகனின் படத்தைக் காட்டி, அவரைப் பற்றி அனைவரிடமும் கேட்டோம். நான் சந்தித்த ஒரு கத்தோலிக்க பாதிரியார், எனது மகன் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்படுவதை பார்த்ததாக கூறினார். இன்னும் சிலர், எனது மகன் அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் உள்ளான் என்று கூறினார்கள். ஆனால், இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டதால், என் மகன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை.

ஆனால் LLRC அறிக்கையில், அரசு மறுவாழ்வு முகாமில் உள்ள குழந்தைகளின் படம் வெளியாகியுள்ளது. அந்தக் குழந்தைகளில் என் மகனைப் பார்த்தேன். நான் மீண்டும் பிறந்தது போல் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். அப்போது வவுனியா 4ம் வலயத்தில் இருந்து புனர்வாழ்விற்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பெயர்களில் எனது மகனின் பெயர்,பாலேந்திரன் மகேந்திரன்னும் குறிப்பிடப்பட்டிருந்தது . அதனால் மீண்டும் என் மகனைத் தேட ஆரம்பித்தேன். முக்கிய அரசு அதிகாரிகளுக்கு எனது பிரச்சினையை தெரிவித்து கடிதம் கொடுத்தேன். நான் கொளுத்தும் வெயிலில் பதாகைகளை ஏந்தி எனது மகனுக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினேன். இதற்கிடையில், அம்பேபுஸ்ஸ முகாம், பொலிஸ், இராணுவம் மற்றும் எல்லா இடங்களிலும் என் மகனைக்குறித்து கேட்டேன்.எல்லோரும் தேடிப் பயனில்லை என்று சொல்லி விட்டுவிட சொன்னார்கள்.

இறுதியாக, 2014ல், விடுதலைப்புலிக்கு தஞ்சம் அளித்தோம் என்று   பொய்யான குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ், சிறையில் அடைக்கப்பட்டேன். வீட்டில் உள்ள உறுப்பினர்கள்ளும், என் மகள்ளும் சோதனையில் வைக்கப்பட்டனர். ஒரு வருடம் கழித்து நான் பிணையில் வெளிவந்தேன். ஆனால், காவல்துறையிடமிருந்தும், ராணுவத்திடமிருந்தும் எங்களுக்கு இன்னும் சுதந்திரம் இல்லை. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் என்னிடம் விசாரணை நடத்தியதில், எனது மகன் இன்னும் அங்கேயே இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன். நம் குழந்தைகளை அடைத்து வைப்பதால் அரசுக்கு என்ன பலன் ?

என் கடைசி மூச்சு விடுவதற்குள் என் மகனை மீண்டும் பார்க்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.

பாலேந்திரன் ஜெயக்குமாரி
கிளிநொச்சி

Similar Posts

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன